எல்லாம் சரிதான். ஆனால் அலுவலகத்தில் இருக்கும் போது முழு மூச்சாக மென் பொருள் உருவாக்கத்தில் ஈடுபடுவதில்தான் சுணக்கம். இறங்கி விட்டால் சுறு சுறுப்பாகப் போனாலும், ஆரம்பிக்கும் முன்னால் ஆயிரம் தடைகள். ஜோயல் ஸ்போல்ஸ்கி எழுதியது போல கணினி வல்லுனர் பாதுகாப்பு வளையம் ஒன்று இருக்க வேண்டும் என்று சமாதானம் சொல்லிக் கொண்டு மீதி எல்லா – வேலை , வேலை என்று நினைப்பவற்றைப் பார்ப்பதுதான் பெரும்பாலும் நடக்கிறது.
24 மணி நேரமும் அதையே சிந்திக்க வேண்டாம். குறைந்தது காலையில் ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை இடையூறுகள் இல்லாமல் ஆறு மணி நேரத்துக்குக் குறையாமல் மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட வேண்டும். இரண்டு மணி நேரம் பிற வேலைகளுக்கு ஒதுக்கிக் கொள்ளலாம். இதை மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம். இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக மூன்று பிரிவுகள். ஒன்பது முதல் பதினொன்று வரை, பன்னிரண்டு முதல் இரண்டு வரை, மூன்று முதல் ஐந்து மணி வரை. இந்த நேரங்களில் இருக்கையைக் கூட வேறு இடத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். வேறு யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.
இடையூறுகள், இடைப்பணிகளை பதினொன்று முதல் பன்னிரண்டு, இரண்டு முதல் மூன்று, ஐந்து முதல் ஆறு வரை செய்து கொள்ளலாம். வேலையில் ஒரு பகுதி, புதிய பகுதிகளை உருவாக்கும் வரைவமைப்புகளில் செலவிட வேண்டும். இன்னொரு இரண்டு மணி நேரப் பகுதியில் பழைய நிரல்களை மேம்படுத்துவதில். இன்னும் இரண்டு மணி நேரம் இரண்டில் எதில் தேவை அதிகமோ அதற்குச் செலவிட வேண்டும்.
நானே இருந்து நிரல் எழுதிக் கொண்டிருக்கும் போக்கைக் கைவிட்டு ஒவ்வொரு பகுதியிலும், ஒருவருடன் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும். உருவாக்க முடியும் நிரல்களின் அளவு குறைவாக இருந்தாலும், கூட இருப்பவருக்கு நமக்குத் தெரிந்ததைக் கற்றுக் கொடுத்து விடலாம். மூன்றில் இரண்டு பகுதிகளிலாவது சேர்ந்து வேலை பார்க்க வேண்டும்.
நேற்றைக்கு பயிற்சிக்கான குட்டிப் பணியின் நிறைவு விவாதங்களில் ஆறு பேருக்கிடையே குழு மனப்பான்மை, அணியாக சேர்ந்து பணியாற்றும் முறை இல்லாமல் இருந்ததை உணர்ந்து சுட்டிக் காட்டினேன். நம்முடைய நிறுவனத்திலேயே அந்தப் பழக்கம் குறைவாகத்தான் இருக்கிறது.
தனி மனிதர்கள் என்னதான் புத்திசாலித்தனமாக செயல்பட்டாலும், ஒரு நிறுவனம் என்பது தனி முயற்சிகளில் கூட்டுத் தொகைகளை விட அதிகமாக பலன் உருவாக்கும் அமைப்பாக இருந்தால்தான் வளர முடியும். உடனடிப் பார்வையில் பலன்கள் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், அப்படி இணைந்து செயல்படும் பழக்கங்களுக்குத் தேவையான செயல்முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
திங்கள் முதல் ஆறு புதிய வீரர்கள். தற்செயலாக அது மாதத்தின் கடைசி நாள் கூட. ஆகஸ்டு மாதத்தில் என்ன சாதிக்க முடிகிறது என்பதை ஒரு முக்கியமான அளவீடாக வைத்துக் கொள்ள வேண்டும். வங்கியில் மாட்டிக் கொண்டுள்ள பணம் வந்து சேர்ந்து விட்டால் கணினி, இருக்கை வசதிகளையும் மேம்படுத்தி வசதியான சூழலை உருவாக்கி விட வேண்டும். செய்ய வேண்டிய தவறுகளை எல்லாம் செய்து தொலைத்தாகி விட்டது. இனிமேல் அதே தவறுகளை திரும்பச் செய்யாமல் பழைய அனுபவங்களின் அடித்தளத்தில் உறுதியான அமைப்பை உருவாக்கி விட வேண்டும்.
தனி மனிதர்களுக்கு முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுக்கும் சூழல் இருக்க வேண்டும். அப்படி உருவாகும் உயர்தர பணியை இணைத்து வாடிக்கையாளருக்கு குறைந்த செலவில் நிறைய பலன்கள் கொடுக்கும் பொருளாக மாற்றிக் கொடுக்க முடிய வேண்டும். கொஞ்சம் கடுமையாகவும் இருக்க வேண்டிய நேரத்தில் அதுவும் தேவைதான்.
கூகுளின் பொருட்கள்/சேவைகளைப் பார்க்கும் போதுதான் அந்த நிறுவனத்தின் உயர் பழக்கங்களை உணர முடிகிறது. ஆச்சரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடும் வன்ணம் புதிய புதிய வசதிகள், புதிய புதிய சேவைகள், பயன்படுத்த தேவைப்படும் இடத்தில் பொருத்தமான தேர்வுகள் என்று ஒவ்வொரு மூலையிலும் ஆச்சரியங்களைப் புதைத்து வைத்திருக்கிறார்கள். ஜீமெயிலில், ஏதாவது நாள், நேரம் குறிப்பிட்டு வரும் அஞ்சலுக்கு மட்டும், ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதற்கான தேர்வு வருகிறது. அதை கிளிக்கினால், குறிப்பிட்ட நாள், நேரம், அதை ஒட்டிய உரை மூன்றுமே பொருத்தமான கட்டங்களில் நிரப்பப்பட்டு ஒரு படிவம்.
கண்டிப்பாக ஒவ்வொரு ஊழியரும் அனுபவித்து உருவாக்கிய, தனக்கு எப்படி இது பயன்படும் என்று சிந்தித்து உருவாக்கிய வசதிகள் இவை. ஒரு கூட்டமாக அமர்ந்து தலைமை சொன்னபடி உருவான சேவைகள் இல்லை இவை. அதுதான் கூகுளின் அமோக வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகிறது.
நாமும் இத்தகைய ஒரு பண்பாட்டை நிறுவனத்தில் வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.