அலைகடலின் ஓரத்திலே பார்த்தவை படித்தவை

போகிற போக்கில் கற்றுக் கொள்பவை

இப்படித்தான் உலகம் (28/08/2006)

பதிந்தவர் masivakumar மேல் அக்டோபர் 28, 2006

ஸ்பென்சர்ஸ் டேலிக்கு ஒரு பத்திரிகை வாங்கப் போனால், வாசலில் ஒரு கூன் போட்ட பாட்டியும் அழுக்கான அவள் பேத்தி போன்ற ஒரு பென்ணும், பிச்சை கேட்டார்கள். ‘சாப்பிட ஏதாவது வாங்கித் தருகிறேன்’ என்று உள்ளே போனேன். ஒரு பொதி முந்திரி பிஸ்கெட் வாங்கி பாட்டியிடம் கொடுத்தால் அது குழந்தைக்குக் கொடுக்க மாட்டேன் என்று நின்றது.

இந்தியா டுடே இருபது ரூபாய் என்று போட்டிருக்க, ஏதேதோ குழப்பி கூட வரும் ஸ்பைஸ் டுடே மீது போட்டிருந்த முப்பது ரூபாயை வாங்கிக் கொண்டாள் விற்பனை பெண். நிதானமாகப் பார்த்த போது இருபது ரூபாய்க்கு வாங்கினால் முப்பது ரூபாய் இணைப்பு இலவசம் என்பதுதான் சரி என்று பட்டது.

பல நாள் தள்ளிப் போட்ட திருக்குறள் வாங்கப் போகலாம் என்று நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்குக்குக் கிளம்பினேன். இன்றைக்கு வள்ளுவர் கோட்டம் எதிரில் நிறுத்த விளக்குகள் எல்லாம் எரிந்தன. நான் தான் அன்று சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ, அல்லது துளசி அக்கா சொன்னது இங்கு வரை கேட்டு விட்டதோ, தானாக சரிப்படுத்திக் கொள்ளும் முறை போதவில்லை போலிருக்கிறது.

முதலில் எல்லாம் லேண்ட்மார்க்கில் தமிழ்ப் புத்தகங்களே இருப்பதில்லை. இப்போது இரண்டு வரிசை வைத்திருக்கிறார்கள். நர்மதா பதிப்பகத்தின் அழகாக அச்சிடப்பட்டு வண்ணமும் கலந்த கெட்டி அட்டை திருக்குறள் வாங்கிக் கொண்டேன், முப்பது ரூபாய்தான். எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் பார்க்கவும் எண்ணம் இருந்தது. அதற்கு முன்பே மகாத்மாவின் நூற்களின் தொகுப்பு, தமிழில் ஐந்து நூல்கள் இருநூறு ரூபாய்க்கு பார்த்திருந்தேன். ஸ்டீபன் ஹாகின்ஸ் புத்தகம் முன்னூறு ரூபாய் என்று தெரிய அதைத் தள்ளிப் போட்டு விட்டு, காந்தியை எடுத்துக் கொண்டேன்.

காந்தியின் தன் வாழ்க்கைக் கதை, தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம், தேர்ந்தடுக்கப்பட்ட கடிதங்கள், உண்மையின் குரல், ஆதார நூல்கள் என்று ஐந்து முத்துக்கள். வாங்கிக் கொண்டு ஏழரை மணிக்கெல்லாம் அலுவலகம் வந்து விட, பின்னூட்ங்களைத் தொகுத்து அட்டவணைப்படுத்திக் கொண்டேன்.

எட்டரை மணி உரையாடல் ஆரம்பித்து ஒன்பதரைக்கு முடிந்து விட்டது. புது புத்தகங்களை பைக்கின் பக்கவாட்டுக் கொக்கியில் மாட்டிக் கொண்டு போய்க் கொண்டிருக்க பாதி வழிக்குப் பிறகு தடவிப் பார்த்தால் பையைக் காணவில்லை. இது போல புத்தகத்தை பிளாஸ்டிக் பையில் தொங்க விட்டால் அறுந்து கீழே விழுந்து விடச் சாத்தியங்கள் அதிகம். அது நடந்து விட்டிருந்தது.

மெதுவாகத் திரும்பி வழியைப் பார்த்துக் கொண்டே போனால் ஒரு திருப்பத்தில் அனாதையாக விழுந்து கிடந்த செல்வத்தைப் பொறுக்கி மார்போடு அணைத்துக் கொண்டேன். யாரும் அதை கவனித்திருக்கவில்லை.

இதற்கு முன் இதே போல நடந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால். சுஜாதாவின் புத்தக வெளியீட்டு விழா ஒன்றுக்குப் போய் விட்டு, தமிழன் காசு கொடுத்து புத்தகம் வாங்குபவன் தான் என்று அவர் சீண்டல்களுக்கு மறு மொழியாக மொத்தத் தொகுப்பையும் ஐநூறு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு வரும் போது கீழே விழுந்து கிடைக்கவே இல்லை. அண்ணா சாலையிலிருந்து அண்ணா நகருக்கு இரவு ஒன்பதரை மணிக்கு வந்த போது நடந்தது. விஞ்ஞானச் சிறுகதைகள், திரைக்கதை எழுதுவது எப்படி, பெண் என்று கூடவே இன்னும் இரண்டு நூல்கள். மிகவும் துக்கமாக இருந்தது அன்றைக்கு.

2 பதில்கள் -க்கு “இப்படித்தான் உலகம் (28/08/2006)”

  1. tamilnathy சொன்னார்

    நண்பருக்கு,

    உங்கள் எழுத்து நடை மிக இயல்பாக வாசிக்கத்தூண்டும்படியாக இருக்கிறது. நிறைய வாசிக்கிறீர்கள் போலிருக்கிறது. எனக்கும் புத்தகங்கள் என்பது உயிர்வாழ்தலுக்கு மேலும் அர்த்தம்செய்பவை.

  2. masivakumar சொன்னார்

    நன்றி தமிழ் நதி,

    அன்புடன்,

    மா சிவகுமார்

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>